ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்?

14.01.2021 13:38:18

 

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 22 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸில் அதன் மக்கள்தொகையில் 0.29 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 300 மில்லியன் டோஸ் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் விநியோக சங்கிலி பிரச்சினைகள் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்த 12.5 மில்லியன் தடுப்பூசிகளை நிறுவனம் வழங்க முடியவில்லை.

இந்த தாமதம் குறித்து பயோஎன்டெக்கின் தலைவர் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் பலவிதமான தடுப்பூசிகள் ஒரே நேரத்தில் தயாராக இருக்கும் என்று தவறாகக் கருதியதால் தாமதம் ஏற்பட்டது. தனது நிறுவனம் அதன் உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றது’ என கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசிகளை வாங்கியவுடன், அது அவர்களின் மக்கள்தொகையின் அடிப்படையில் நாடுகளுக்கு (27 உறுப்பு நாடுகள்) இடையே விநியோகிக்கப்படுகிறது.

இந்த அணுகுமுறை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான போட்டியைத் தவிர்க்கிறது என்று ஐரோப்பிய ஆணையம் கூறுகிறது.
தற்போது மொடர்னா மற்றும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.