உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழுவை ஏற்கமாட்டோம் போராட்டத்தை தொடர்வோம் - விவசாயிகள் சங்கம்

13.01.2021 11:22:07

உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழுவை ஏற்கமாட்டோம் என்றும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

3 வேளாண்மை சட்டங்களையும் நிறுத்தி வைத்தும், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர்.

இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததுமே தங்கள் தரப்பு வக்கீல்களுடன் விவசாய சங்கத்தினர் ஆலோசனை நடத்தினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது.

ஏனென்றால் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேருமே விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள். அவர்கள் இந்த சட்டங்களை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். கருத்துகளை கூறி இருக்கிறார்கள்.

அவர்களை வைத்து குழு அமைத்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் சூழ்ச்சி இடம்பெற்றதாக கருதுகிறோம்.

எனவே இந்த குழுவை ஏற்கமாட்டோம். அதனை சந்திக்கவும் மாட்டோம். திட்டமிட்டபடி எங்களுடைய போராட்டங்கள் தொடரும். 26-ந்தேதி ஏற்கனவே அறிவித்த டிராக்டர் பேரணியும் திட்டமிட்டபடி நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விவசாயிகள் சங்கத் தலைவர் பல்வீர்சிங் கூறியதாவது:-

எங்களுடைய போராட்டத்தை திசை திருப்பவும், அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கவும் இந்த குழுவை அமைத்து இருக்கிறார்கள்.

இதில் மத்திய அரசின் எண்ணங்கள் பிரதிபலிப்பதை நாங்கள் உணருகிறோம். இதில் இடம்பெற்றுள்ள அனைவருமே அரசுக்கு ஆதரவான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.