அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நாளை...

20.02.2021 11:41:20

 

அவுஸ்ரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவும் மோதுகின்றனர்.

கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை(ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவ் (ரஷ்யா) மோதுகின்றனர்.

மெட்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளார்.

அவர் அதிக பட்டம் பெற்ற வீரர்களில் முதல் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார். இருவரும் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

களிமண் தரையான பிரெஞ்சு ஓபனில் ஆடுவதில் நடால் புதிய வரலாறு படைத்து உள்ளார். அவர் அதில் மட்டுமே 13 பட்டங்களை வென்றுள்ளார். புல்தரையான விம்பிள்டனில் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டங்களை வென்றுள்ளார்.

இதேபோலத்தான் ஜோகோவிச் அவுஸ்ரேலிய ஓபனில் அசைக்க முடியாத வீரராக உள்ளார். அவர் 8 பட்டங்களை கைப்பற்றியுள்ளார். 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஜோகோவிச் அவுஸ்ரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

அவர் 9-வது முறையாக அவுஸ்ரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மெட்வதேவ் அவருக்கு எல்லா வகையிலும் கடும் சவாலாக விளங்குவார்.

28-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டியில் ஜோகோவிச் விளையாடுகிறார். அவர் இதுவரை அவுஸ்ரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றது கிடையாது.

ஆண்டி முர்ரேயை (2011, 2013, 2015, 2016) 4 முறையும், நடாலை (2012, 2019) 2 தடவையும், வில்பிரட் சோங்கா (2008), டொமினிக் தீம் (2020) ஆகியோரை தலா ஒரு முறையும் அவுஸ்ரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் வீழ்த்தினார்.

25 வயதான மெட்வ தேவ் 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

இதன்மூலம் 2 இற்கும் மேற்பட்ட கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 3-வது ரஷ்ய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கபெல்னிகோவ், மாரட்சபின் ஆகியோருக்கு அடுத்த நிலையை அவர் பெற்றார்.

ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்வாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.