திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!

23.02.2023 07:00:00

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் 41,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆய்வு செய்துள்ளார்.

முனைப்பான நிர்வாகம் மற்றும் குறித்த நேரத்தில் திட்டங்கள் அமுலாக்கத்துக்கான ‘பிரகதி’ எனப்படும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான திட்டத்தின் 41ஆவது கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் 3 திட்டங்கள், மத்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைதவிர ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் ஆகிய அமைச்சகங்களின் தலா ஒரு திட்டம் என 9 முக்கியத் திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட்டன.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான திட்டமிடலுக்கு பிரதமரின் கதிசக்தி இணையதள பக்கத்தை பயன்படுத்த வேண்டுமென்று அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

‘அமிர்த சரோவர்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 50,000 நீர்நிலைகளுக்கு புத்துயிரூட்டும் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வட்டார அளவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.