முன்னாள் அடிடாஸ் நிறுவன உரிமையாளர், மனைவியை கட்டி போட்டு அடி, உதை: திருடர்கள் அட்டூழியம்

05.04.2021 08:23:52

அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் பெர்னார்டு தபை.  இவரது மனைவி டாமினிக் தபை.  அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரான பெர்னார்டு, பாரீஸ் அருகேயுள்ள காம்ஸ் லா வில்லே பகுதியில் அமைந்த தனது வீட்டில் மனைவியுடன் படுத்து உறங்கியுள்ளார்.

அவரது வீட்டிற்குள் நேற்று அதிகாலை 4 திருடர்கள் புகுந்துள்ளனர்.  அவர்கள் பெர்னார்டு மற்றும் அவரது மனைவியை அடித்து, உதைத்துள்ளனர்.  இதில் வலி பொறுக்க முடியாமல் அவர்கள் அலறியுள்ளனர்.  பின்னர் இருவரையும் கயிற்றால் கட்டி போட்டுள்ளனர்.

அதன்பின் வீட்டில் இருந்த பொருட்களை அள்ளி கொண்டு சென்று விட்டனர்.  டாமினிக் கயிற்றில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு அண்டை வீட்டுக்கு சென்று அங்கிருந்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

லேசாக காயமடைந்து இருந்த டாமினிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படார்.  ஆனால், பெர்னார்டு மருத்துவ உதவி எதுவும் வேண்டாம் என கூறி மறுத்து விட்டார்.  கொள்ளையர்கள் எவற்றை எல்லாம் திருடி சென்றனர் என உடனடி தகவல் இல்லை.

பெர்னார்டு தனது தொடக்க காலத்தில் வீழ்ச்சி கண்ட நிறுவனங்களை வாங்கியுள்ளார்.  அவர் தனது பங்குகளை அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் நிறுவனத்திற்கு விற்ற வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  போலீசார், கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.