அகுட்- சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம் ! - மியாமி பகிரங்க டென்னிஸ்

01.04.2021 11:24:25

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ரொபர்டோ பாடிஸ்டா அகுட் மற்றும் ஜெனிக் சின்னர் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா அகுட், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரொபர்டோ பாடிஸ்டா அகுட், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், இத்தாலியின் ஜெனிக் சின்னர், கஸகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் ஜெனிக் சின்னர், வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், கனடாவின் பியான்கா ஆண்ரெஸ்குவும் ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டார்மோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், பியான்கா ஆண்ரெஸ்கு 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.