வடக்கே இன்று செல்லும் எழுச்சிப் பேரணி

05.02.2021 09:01:15

 

இலங்கை அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் மாபெரும் எழுச்சிப் பேரரணி பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்றிரவு திருகோணமலை சிவன் கோயிலடியில் தரித்து நின்ற குறித்த பேரணி, மூன்றாவது நாளான இன்று காலை அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணிக்கின்றது.இரண்டாவது நாள் பேரணி நேற்றுக் காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு -தாழங்குடாவில் சமய ஆராதனைகளுடன் ஆரம்பித்தது. அது திருகோணமலை வீதி ஊடாக ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை வழியாக ஓட்டமாவடி நகர எல்லைக்குள் நுழைந்தது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தலைமையில்பெருமளவான முஸ்லிம் மக்களும் பேரணியில் இணைந்து கொண்டனர்.

நீதிக்கான மாபெரும் எழுச்சிப் பேரணி நேற்று முன்தினம் அம்பாறை மாவட்டத்தையும், நேற்றுக் காலை முதல் முற்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்து மாலை திருகோணமலை மாவட்டத்துக்குள் நுழைந்தது.
அங்கு கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தினரும் பெருமளவில் திரண்டு ஆதரவு வழங்கினர்.

திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் பேராதரவுடன் நேற்றிரவு 8.20 மணியளவில் தரித்து நின்ற பேரணி இன்று காலை 8.00 மணியளவில் திருகோணமலை சிவன் கோயிலடியிலிருந்து மீண்டும் ஆரம்பமாகி மணலாறு வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடையும்.

இன்று நண்பகலை அண்டி முல்லைத்தீவு – உடுப்புக்குளம் பகுதி யில் தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் மதத் தலைவர்கள் இணைந்து பேரணி வரவேற்கப்பட்டு பேரணியோடு
இணைந்து தொடர்ந்து முல்லைத்தீவு நகரம் நோக்கிச் செல்லவுள்ளனர்.

எனவே, முல்லைத்தீவில் பேரணியோடு ஒன்றுகூடக் கூடியவர்கள் உடுப்புக்குளம் பகுதியில் இணைந்து கொள்ளுங்கள் என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.