இறுதி டெஸ்டிலிருந்து புக்கோவ்ஸ்கி விலகல்

14.01.2021 13:45:17

 

இந்தியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து, அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில் புக்கோவ்ஸ்கி விலகியுள்ளார்.

சிட்னி டெஸ்டின் இறுதி நாளில் தோள்பட்டையில் உபாதைக்குள்ளான புக்கோவ்ஸ்கி, பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) நடந்த உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்தார்.

இதனால் அவருக்கு பதிலாக மார்கஸ் ஹரிஸ், ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் போட்டியில் டேவிட் வோர்னருடன் களமிறங்குவார்.

எவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு ஆஷஸுக்குப் பிறகு ஹாரிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அங்கு அவர் தொடரின் நடுப்பகுதியில் அழைக்கப்பட்டார், கேமரூன் பான்கிராப்டுக்கு பதிலாக ஆறு இன்னிங்ஸ்களில் 58 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது.