ஹூபர்ட் ஹர்காஸ்- ஆஷ்லே பார்டி சம்பியன் ! - மியாமி பகிரங்க டென்னிஸ்

05.04.2021 08:06:13

 

அமெரிக்காவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஹூபர்ட் ஹர்காசும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டியும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ், இத்தாலியின் ஜெனிக் சின்னரை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இதன்பலனாக முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது.

டை பிரேக் வரை நகர்ந்த இந்த செட்டில், ஹூபர்ட் ஹர்காஸ் கடுமையாக போராடி 7-6 என செட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும், ஹூபர்ட் ஹர்காஸின் ஆதிக்கம் தொடர்ந்தது.

இதில், நிதானத்துடன் விளையாடிய ஹூபர்ட் ஹர்காஸ், செட்டை 6-4 என கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஹூபர்ட் ஹர்காஸ், முதல் ‘மாஸ்டர்ஸ் 1000’ சம்பியன் பட்டத்தை வென்றார்.


அடுத்ததாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்குவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஆஷ்லே பார்டி, வென்றார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 4-0 என்ற கணக்கில் ஆஷ்லே பார்டி, முன்னிலைப் பெற்றிருந்த போது, பியான்கா ஆண்ட்ரெஸ்கு கணுக்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதனால். உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, சம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம், கடந்த ஆண்டு பெற்ற சம்பியன் பட்டத்தை ஆஷ்லே பார்டி, தக்கவைத்துக்கொண்டார்.