ரி-20 தொடர் : மே. தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள்- :இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

23.02.2021 07:26:22

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

20பேர் கொண்ட அணியில், கடந்த மாதம் காலியில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஃப்-பிரேக் சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டிலும் அறிமுகத்தை பெறுகிறார்.

அத்துடன் பத்தும் நிசங்கா மற்றும் ஆஷென் பண்டாரா ஆகியோரும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மிகச் சமீபத்திய 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 20 வயதான வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவும் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெறுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு அனுபவமிக்க வீரரான தினேஷ் சந்திமால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சய, கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அவர் தனது பந்துவீச்சு முறைமையை மறுவடிவமைத்த பின்னர், 12 மாத இடைநீக்கத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இந்த தொடருக்காக முன்னர் தேர்வு செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவருக்கு பதிலாக சுரங்க லக்மால் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதுதவிர இலங்கை ரி-20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

திமுத் கருணாரத்ன, தசுன் சானகா, தனுஷ்கா குணதிலக, பத்தும் நிசங்கா, ஆஷென் பண்டாரா, ஓசேத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திசார பெரேரா, கமிந்து மெண்டிஸ், வணிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், நுவான் பிரதீப், அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, அகில தனன்ஜய, லக்ஷன் சந்தகன், தில்ஷன் மதுஷங்கா, சுரங்க லக்மல்.

இந்த மாத ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், ரி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில் முதலில் நடைபெறும் ரி-20 தொடரின், முதல் போட்டி மார்ச் 3ஆம் திகதி ஆன்;டிகுவாவில் நடைபெறவுள்ளது.