அரசியல் கேள்விக்கு பரம்பரை உட்படுத்தப்படும் என்ற அச்சத்திலேயே அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த அஞ்சுகிறது – சிறிதரன்

12.04.2021 09:13:47

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவது சம்பந்தமாக எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எந்த முறையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தால் நாங்கள் அந்த மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

குறிப்பாக மாகாண சபை என்பது வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாகவே கொண்டு வரப்பட்டது. அந்த அடிப்படையில் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அது என்ன முறையில் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், விரைவாகவும் வேகமாகவும் அந்த மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

அத்தேர்தலை நடாத்தி உடனடியாக மாகாண சபைகளில் அதிகார பரவலாக்கல், அதன் ஊடான மக்கள் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

19ஆம் திகதி தீர்மானிக்கின்ற திகதியென்பது பலமுறை அவர்களால் சொல்லப்பட்ட செய்திகள். இன்னுமின்னும் அதன் காலம் இழுத்தடிக்கப்படலாம். காலத்தை இழுத்தடிக்கப்படாமல் உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

விரக்தி அடைந்திருக்கின்ற சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கட்டாயம் வாக்களிப்பார்கள். அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.

அடுத்து அவர்களின் அரசியல் பாரம்பரியம் அல்லது பரம்பரை அரசியல் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற பயத்தின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த பின்னடிக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.