பாகிஸ்தான் தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது - T20

15.02.2021 11:21:41

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ‘ருவென்டி 20’ போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் தொடரையும் 2 – 1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ருவென்டி 20 தொடர் லாகூர் மைதானத்தில் இடம்பெற்றது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தானும், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவும் வெற்றி பெற்றன.

தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா சார்பில் டேவிட் மில்லர் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் தொடக்க வீரர் முகமட் ரிஸ்வான் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ‘ருவென்டி 20’ தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானின் முகமட் நவாஸ் ஆட்ட நாயகன் விருதையும், முகமட் ரிஸ்வான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.