அரசு நாடு முழுவதும் ஒக்ஸிஜன் மையங்களை அமைக்க நடவடிக்கை !

19.04.2021 10:23:50

 

நாடு முழுவதும் புதிதாக ஒக்ஸிஜன் மையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் 162 ஒக்ஸிஜன் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகின்றது. இதன்காரணமாக ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.

அந்தவகையில் மகாராஷ்டிராவில் ஒக்ஸின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சத்தீஸ்கரில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக 4 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒக்ஸிஜன் நிரப்பும் ஆலைகள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.