கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன

13.06.2021 11:29:42

தமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (சனிக்கிழமை) தமிழகத்துக்கு 3 இலட்சம் கோவிஷீல்டு மற்றும் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 270 கோவேக்சின் மருந்துகள் மத்திய அரசினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

குறித்த தடுப்பூசி மருந்துகளை, 37 மாவட்டங்களிலுள்ள 45 சுகாதார மையத்திற்கு பிரித்து அனுப்பியுள்ளதாக தமிழக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பூந்தமல்லி,  திருவள்ளூரை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  உள்ளடக்கிய சென்னை மண்டலத்திற்கு அதிகபட்சமாக 46ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 18 ஆயிரத்து 170 கோவேக்சின் என 64 ஆயிரத்து 670 தடுப்பூசி மருந்துகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகியவற்றை  உள்ளடக்கிய கோவை மண்டலத்திற்கு 43 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகளும் 17 ஆயிரத்து 800 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் குறைந்தபட்சமாக பரமக்குடி, ராமநாதபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிவகங்கை மண்டலத்திற்கு, 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.