இன்று ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம்

05.04.2021 07:42:11

 

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின் போது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக பல நிகழ்வுகளை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது

இதற்கமைய இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த மாவட்டங்களில், மக்கள் விடுதலை முன்னணியினை சார்ந்தவர்களின் ஆதரவின் கீழ் நினைவுச் சடங்குகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஹிங்குரகொட பகுதியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் வரலாற்றிலும் தமிழ் மக்கள் வரலாற்றிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய நிகழ்வே 1971 ஆம் ஆண்டு  கிளர்ச்சியாகும்.

இந்த கிளர்ச்சி சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலத்தில் இடம்பெற்றபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டது.

மேலும் கிளர்ச்சியை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் ஆகியோருக்கு எதிராக நிறுவப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், பிரிட்டிஷ் மகாராணிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி போர் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்குக் காரணம் அப்போது மகா தேசாதிபதியாக இருந்தவர் மகாராணியினுடைய பிரதிநிதியாகவே காணப்பட்டமையே ஆகும்.

மேலும் குறித்த கிளர்ச்சி, இலங்கை வரலாற்றில் முக்கிய இடத்தினை வகித்துள்ளது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் விடுதலை முன்னணி, இந்த கிளர்ச்சியை நினைவு கூறும் வகையில் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது.