உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்

17.12.2022 11:13:57

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன.

அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணி தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் (எப்) முதலிடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

2-வது சுற்றில் ஸ்பெயினுடன் கூடுதல் நேரம் முடிவில் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது.