ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்?

28.03.2023 23:20:26

ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராக எளிய பெரும்பான்மை வாக்குகளுடன் உயர் பதவியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்தநிலையில், ஹம்சா யூசப்பை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் பின்னர் வாக்களிக்கும்.
50,490 வாக்குகளில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹம்சா யூசப், கட்சித் தலைமையை வென்றார்.

37 வயதான ஹம்சா யூசப், ஒரு பெரிய பிரித்தானிய கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் முஸ்லீம் ஆவார் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல் சிறுபான்மை இனத் தலைவராகவும் ஆனார்.

ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டக்ளஸ் ரோஸ், ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார் மற்றும் ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அலெக்ஸ் கோல்-ஹாமில்டன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை.