சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த வேண்டும்!

15.01.2021 15:00:00

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூறலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் கொண்டு சென்று நிறுத்த உதவ வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் ஐ.நா உயர் ஸ்தானிகர் மற்றும் இணை தலைமை நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இன்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது அவர் தெரிவித்ததாவது,

1. எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூறலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் கொண்டு சென்று நிறுத்த உதவ வேண்டும்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதானது அதனை தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்வதுடன், இலங்கை அரசின் கொடுமையான சட்டங்களாலும் தமிழர் தாயக பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவ பிரசன்னத்தாலும் தமிழ் மக்களிற்கு எதிரான வன்முறைகளிற்கு இது வழிசமைக்கும்.

2. இலங்கையில் நீண்ட காலமாக புரையோடிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்காக சர்வதேசத்தால் ஒழுங்கமைக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதுமான ஒரு சர்வசன வாக்கெடுப்பினை நடத்தி இலங்கை அரசினால் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்படும் மனித கொடுமைகள் மீளவும் நடைபெறாதிருக்க இலங்கையில் நீண்ட காலமாக தீர்க்கப்படமலிருக்கும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் சர்வதேச ஒழுங்கமைப்புடன் சர்வதேசத்தால் கண்காணிக்கும் வகையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுதல் வேண்டும்.

நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றில்லாமையால் தமிழ் மக்களிற்கு எதிரான வன்கொடுமைகள் 50 ஆண்டுகளிற்கு மேலாக 1958, 1977, 1983, 2009 ஆம் ஆண்டுகளில் திரும்ப திரும்ப மெற்கொள்ளப்படுவதற்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளது.

3. யுத்தத்தினால் தாரத்தை இழந்த 90,000 தமிழ் பெண்களின் நிலை தொடர்பாக, குழந்தைகள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிதல் தொடர்பான நிலைப்பாடுகள், தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக, பல்வேறு வகையான நில அபகரிப்பு, இராணுவ பிரசன்னம் மாற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறுதல் சம்பந்தமான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்டவை தொடர்பாக எதிலாவது முன்னேற்றம் இல்லாவிடின் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.