வெவ்வேறு நபருடன் நான்கு முறை திருமணம்.... - வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்

02.04.2021 10:57:56

நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. 

இசையமைப்பாளர் அனிருத்துடன், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவரும் நண்பர்கள்தான், அவர்களிடையே காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன், கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது. 

இதனையும் மறுத்த கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இருப்பினும் அவர் குறித்து தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன. 

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்றார்.