ஆளுநர் மாளிகையில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடிய துணை ஜனாதிபதி

13.01.2021 11:10:28

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா ஆளுநர் மாளிகையில் இன்று போகி பண்டிகையை கொண்டாடினார்.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் துவக்கமாக போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி இன்று அதிகாலையில் தீயிட்டு கொளுத்தினர். 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தனது குடும்பத்தினருடன்  போகியை கொண்டாடினார். யாகசாலை பூஜை செய்வதுபோன்று, செங்கற்களை அடுக்கி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் பழைய பொருட்கள் மற்றும் கட்டைகளை அடுக்கி தீயிட்டு எரித்து போகி கொண்டாடினர்.

ஆந்திர மாநில மந்திரி வெள்ளம்பள்ளி ஸ்ரீனிவாச ராவ் விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் போகியை கொண்டாடினார்.  இதேபோல் பல்வேறு தலைவர்கள் தங்கள் இல்லங்களில் குடும்பத்தினருடன் போகியை கொண்டாடினர். மேலும், மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.