சத்தீஸ்கர் விரைந்தார் அமித் ஷா நாட்டையே உலுக்கிய என்கவுண்டர்...

05.04.2021 08:13:47

 

பதிலடி கொடுக்க பாதுகாப்பு படை வீரர்களுக்கு உத்தரவு அமித்ஷா சத்தீஷ்கர் விரைந்தார் ‘என்கவுண்டர்’ நடந்த இடத்தில் ஆய்வு

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய சவாலாக திகழ்கிறார்கள். மாவோயிஸ்டுகளை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர்-சுக்மா எல்லைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீசின் கமாண்டோ பிரிவு மாவட்ட ஆயுத காவல் படை, சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட படைப் ரிவுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட் டனர்.

தலைநகர் ராய்பூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பயிற்சியில் ஈடுபடப்போவதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம் அடைந்ததாகவும் வீரர்கள் சிலர் காணவில்லை என்றும் சத்தீஸ்கர் மாநில நக்சல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி முதலில் தெரிவித்தார்.

இந்த சண்டைக்கு பிறகு பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தேடுதலில் அந்த பகுதியில் இருந்து பெண் மாவோயிஸ்டு ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் மாவேயிஸ்டுகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே துப்பாக்கி சண்டை நடந்த வனப்பகுதியில் காணாமல் போன 18 வீரர்களில் 17 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் பாதுகாப்பு படை வீரர்களின் உயிரிழப்பு 22 ஆக அதிகரித்தது.

இந்த மோதலின் போது பாதுகாப்பு படை வீரர்களின் சில ஆயுதங்களையும் காணவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடர்ந்த வனப்பகுதியில் நடந்த இந்த சண்டையில் பாதுகாப்பு படையினரால் தேடப்படும் ஹித்மா, அவரது உதவியாளர் சுஜாதா ஆகியோர் தலைமையில் சுமார் 400 மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மாவோயிஸ்டுகள் 3 பகுதிகளில் இருந்து பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி தாக்கியது தெரிய வந்தது. இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் வீரத்துடன் பதில் தாக்குதல் நடத்தினர். நக்சலைட்டுகள் தரப்பில் 12 பேர் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களின் உடல்களை மாவோயிஸ்டுகள் டிராக்டரில் எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் உயிர்த்தியாகம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அவசரமாக சத்தீஸ்கர் விரைந்தார்.

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 13 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமித் ஷா அங்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் அவர் விரிவாக கேட்டறிகிறார்.

பின்னர் என்கவுண்டர் நடந்த சுக்மா பகுதிக்கு சென்று அமித் ஷா ஆய்வு செய்ய உள்ளார். உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த உள்ளார். மாநில முதல்-மந்திரி பூபேஸ் பகலும் இதில் கலந்து கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். அப்போது இந்த சம்பவத்துக்காக மாவோயிஸ்டுகளுக்கு உரிய பதிலடி கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொள்வார் என தெரிகிறது.

முன்னதாக அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில், ‘பாதுகாப்பு படை வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். அவர்களது வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அமைதி, முன்னேற்றத்துக்கு எதிரான நமது போராட்டம் தொடரும்’ என கூறியிருந்தார்.