இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தம் மீறப்பட்டதா..!

26.03.2023 01:16:31

ஆட்களே வசிக்காத கச்சதீவில் சூட்சுமமான முறையில் பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்று கட்டப்பட்ட நகர்வு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கச்சதீவை இந்தியா சிறிலங்காவுக்கு வழங்கிய போது 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயத்துடன் சேர்த்து அதனை வழங்கியிருந்தது.

இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தம்

 

இதற்கு அப்பால் இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அதனைத் தவிர்த்து நிரந்தர கட்டிடங்கள் எவையும் அமைக்கப்படக் கூடாது என்ற நியமமும் இருக்கின்றது.

ஆனால் சமகாலத்தில் இதற்கு மாறான நகர்வுகள் இடம்பெறுகின்றது சிறிலங்கா - இந்திய யாத்திரியர்கள் வருடாந்தம் ஒன்று கூடி, அந்தோனியார் திருவிழாவை செய்துவிட்டு அந்தத் தீவை விட்டு அகல்வது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது அங்கு ரகசியமான வகையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது மட்டுமல்லாது, புதர்கள் மற்றும் கடல் சார்ந்த காட்டுத் தாவரங்கள் மட்டுமே இருக்கும் அந்தத் தீவில் தற்போது அரச மரங்களும் நாட்டப்பட்டுள்ளன.

வழக்கத்துக்கு மாறான நகர்வு

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கச்சதீவு திருவிழாவுக்கு வழக்கத்துக்கு மாறாக பௌத்த பிக்குகள் குழாம் ஒன்றும் அங்கு சென்றிருந்தது. இதன் பின்னர் தான் இவ்வாறான பௌத்த கட்டுமானங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

இப்போது இந்த விடயத்தில் இந்தியா ஏதாவது எதிர் வினைகளை ஆற்றிக் கொள்ளுமா? அல்லது பாஜகவின் இந்துத்துவாவின் அடிப்படையில் கச்சதீவு அந்தோனியாரை கிரணப்படுத்தும் புத்தரை சகித்துக் கொள்ளுமா தெரியவில்லை.

ஆனால் மதக் கட்டுமனங்களாக இருந்தாலும் அந்தோனியார் ஆலயத்தை தவிர்ந்த புதிய நிரந்தரமான கட்டுமானங்கள் இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதும் குறிப்பிடத்தக்கது.