உடனடியாக தமிழக அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும்- கர்நாடகா எதிர்ப்பு !

23.02.2021 07:20:09

 

காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு, காவிரி நதியில் 45 டி.எம்.சி. தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்திக் கொண்டு நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், காவிரி தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளமை கண்டிக்கத்தக்கது எனவும் இந்த சட்ட விரோதத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழக முதல்வரைக் கேடுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு காவிரி நதி நீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி நதிகள் இணைக்கும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த நதிகள் இணைக்கும் திட்டத்தைக் கைவிடும்படி கோரி, தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுத வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்திய மதிப்பில், 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் இந்த நதிகள் இணைப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடலில் கலக்கும் உபரிநீரை வறட்சி நிலைமையில் தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்கு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.