கோட்டாபய விடுத்த அவசர அழைப்பு! தயாராகும் கூட்டமைப்பு

15.06.2021 09:27:17

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

எனினும் சந்திப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலைமைப்பு, தமிழ் சிறைக்கைதிகள், காணி விடுவிப்பு மற்றும் தமிழ் மக்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக புளெட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இதன்போது, புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.