வேளாண் சட்டங்கள் அமுல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

12.01.2021 09:44:43

 

வேளாண் சட்டங்கள் அமுல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ”வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாகத் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்திய அரசு கையாண்ட அணுகுமுறைகள் எந்தப் பலனையும் தரவில்லை.

அந்தச் சட்டங்களுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் அதிருப்தியைத் தருகின்றன.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதுகிறோம். அது குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினையைவிட போராட்டத்துக்கான உரிமை என்ற பிரச்சினையே முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனுகூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

எனவே, வேளாண் சட்டங்களை மத்திய அரசே ரத்து செய்கின்றதா, அல்லது அப்பணியை நீதிமன்றம் செய்ய வேண்டுமா என்பதை மத்திய அரசே தெரிவிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.