காய் நகர்த்தலா ? தமிழர் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்த அமெரிக்கா !

03.06.2021 09:41:51

அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்ந அறிக்கையில் குறிப்பிடுகையில்,

அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்விகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது. அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாக அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடகிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987 ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது.