வடக்கு, கிழக்கில் கதவடைப்புக்கு அழைப்பு

18.04.2023 06:57:42

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ் கட்சிகளுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று (17) நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை(17)  நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   தெரிவித்தார்.