தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதில் சலுகை – அரசாங்கத்தின் அறிவிப்பு

12.01.2021 10:33:28

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படவிருந்த சலுகை காலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நீடிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழிலின்மை காரணமாக ஊழியர்களை வீடுகளில் தங்கவைக்க நேரிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாய் ஆகிய இரண்டில் மிகவும் சாதகமான தொகையை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

சேவை வழங்குநர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திறன்விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய தனியார் துறையினருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை குறித்த தொகையை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.