அரசாங்கத்திற்கு “கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட வேறுவழி கிடையாது”

28.04.2021 11:41:54

 

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் அவை பரவாமல் தடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறினார்.

ஆனால் குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை நிச்சயம் கடைப்பிடிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு உதவ வேண்டிய கடப்பாடு மக்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை அரசாங்கம் கட்டுப்படுத்தியதால், தற்போதுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நெறிமுறை மூலம் தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஆனால் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், தொற்றுநோய் ஒரு சுகாதார பேரழிவாக மாறினால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதேவேளை, சித்திரை புத்தாண்டின் போது கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை விதிக்க அரசாங்கம் தவறிவிட்டமையை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஒப்புக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.