இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவின் மாறுபாடு அல்ல

27.04.2021 10:15:39

 

இந்தியாவில் பரவும் கொரோனா தொற்றின் மாறுபாடு இலங்கையில் பரவுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நாட்டில் பரவும் வைரஸின் மாற்றம் குறித்த முழுமையான விபரம் அடுத்த வாரம் வெளியாகும் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலையின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும், இதுபோன்ற சாத்தியத்தை குறைக்க சுகாதார அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

நாட்டில் பரவி வரும் வைரஸ் ஒரு பிறழ்வுக்கு உட்பட்டது மற்றும் ஒரு புதிய மாறுபாடாக கூட இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வுகள் காட்டுவதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்தார்.

குறிப்பாக பண்டிகை காலத்திற்குப் பின்னர் கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இந்த பிறழ்வை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டர்.

தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், அதிக அளவில் பரவக்கூடும் என்பதனால் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றினால் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்தார்.