நாட்டு மக்களிடம் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரினார் சஜித்!

05.04.2021 07:43:44


ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்மொழிந்தது.

ஆணைக்குழுவின் ஆதாரங்களின் அடிப்படையில், தாக்குதல்கள் தொடர்பான செயல்கள் அல்லது குறைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் தரப்பில் குற்றவியல் பொறுப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.

அந்த நேரத்தில் நாட்டின் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கவின் தளர்வான அணுகுமுறை ஈஸ்டர் தாக்குதலை தடுக்க அப்போதைய அரசாங்கத்தின் தரப்பின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, சஜித் பிரேமதாச ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களிலும் நாட்டின் மூன்று தேவாலயங்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்தோடு, 500இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சஜித் பிரேமதாச அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.