உக்ரைனிய ஜனாதிபதியுடன் பேசுமாறு சீன ஜனாதிபதிக்கு ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தல்!

01.04.2023 21:04:06

போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்தை நடத்துமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் 12 அம்ச முன்மொழிவின் சில பகுதிகளையும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பாராட்டினார்.

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பெய்ஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கடந்த மார்ச் 20-21 திகதிகளில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்க்கு உக்ரைனிய ஜனாதிபதி முன்வைத்த திட்டங்களை ஸ்பெயின் ஆதரிப்பதாக தெரிவித்ததாக கூறினார்.

ரஷ்யா 2014இல் கிரிமியாவை இணைப்பதற்கு முன்னர் உக்ரைனின் பிரதேசத்தை தற்போதைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடங்கும்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இது உக்ரைனில் ஒரு நீடித்த அமைதிக்கான அடித்தளத்தை அமைக்கும் ஒரு திட்டம் என்று நான் நம்புகிறேன்,

மேலும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் அதன் கொள்கைகளுடன் முழுமையாக இணைந்துள்ளது, இது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படையெடுப்பால் மீறப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

‘உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்த எங்கள் கவலையை நான் வெளிப்படுத்தினேன்’ என்று சான்செஸ் கூறினார்.

உக்ரைனின் சமாதானத் திட்டத்தை நேரடியாக அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் பேச ஸியை அவர் ஊக்குவித்தார்.. ஆனால், இந்த பிரச்சினை குறித்து சீன ஜனாதிபதி, என்ன கூறினார் என்பதை சான்செஸ் கூற மறுத்துவிட்டார்.