வோர்னர் மூன்றாவது போட்டியில் விளையாடுகின்றார்

06.01.2021 06:56:04

 

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்  டேவிட் வோர்னர் விளையாடவுள்ளதாக அவுஸ்ரேலிய அணி தலைவர் டிம் பெயின் அறிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடி வருகின்றது.

ஒருநாள் தொடரை 1 – 2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2 – 1 என வென்றது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1 – 1 என சமன் செய்துள்ளது. 3 வது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. 4 வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15 இல் தொடங்குகிறது.

காயம் காரணமாக கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத டேவிட் வோர்னர், சிட்னி டெஸ்டில் விளையாடவுள்ளதாக அவுஸ்ரேலிய அணி தலைவர் டிம் பெயின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நிச்சயமாக டேவிட் வோர்னர் விளையாடுகிறார். அவர் அற்புதமான வீரர். அணி வீரர்களிடையே உற்சாகத்தை உருவாக்கி, நம்பிக்கையை ஏற்படுத்துபவர்.

அவர் நன்றாக விளையாட ஆரம்பித்தால் எதிரணிக்கு அழுத்தம் ஏற்படும். யாருக்கு எதிராக விளையாடினாலும் டேவிட் வார்னர் அணியில் இருந்தால் நாங்கள் மேலும் சிறந்த அணியாக இருப்போம்.

எங்களுடைய நடு வரிசையை காக்கக் கூடியவர். பந்துவீச்சாளர்கள் சோர்வில் இருக்கும்போது லபுசான், ஸ்மித் களமிறங்குவார்கள். அது எங்களுக்குச் சாதகமாக அமையும். அணியில் வோர்னர் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இதுவரை மிகச்சிறப்பாக விளையாடிய ஒரு வீரர்“ எனத் தெரிவித்துள்ளார்.