மர்மத்துக்கு விடை கோருகிறார் கருணாவதி

12.01.2021 10:24:39

“சுமந்திரனை, அயோக்கியன் என்றும் சிங்களத்தின் எடுபிடி; கைக்கூலி; வழிப்போக்கன் என்றும், ஊடகங்களில் உரைத்த சிவகரன், நீதி கோரல் விடையத்தில் மாத்திரம், எவ்வாறு சுமந்திரனுடன் கைகோர்த்தார்?” என்று, வடக்கு-கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு தீர்மானத்துக்குள்ளும், ஒரு வருட கால அவகாசத்தை, தமிழர் தரப்பு முன்வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

எமது உறவுகள், தொடர்ந்தும் சிறைக்குள் இருக்கின்றார்கள் என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை தொடர்பில், பொதுசபையில் கையளித்து, ஒரு வருட கால அவகாசத்துடன் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தாங்கள் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு ஒரு வருட கால அவகாசம் என்பது, ஐக்கிய நாடுகள் பொதுசபைக்கு,  இதை நடைமுறைப்படுத்த வழங்கப்படுகிறதா, அப்படி நடைபெறாத பட்சத்தில் மாற்றுத் திட்டம் என்ன போன்ற விடயங்கள் தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தர தவறிவிட்டதாகவே தான் அதைப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றவர்களை விமர்சிப்பதை வாழ்க்கையாகக் கொண்ட சிவகரன், நீதி கோரல் விடையத்தில், எப்படி சுமந்திரனுடன் கைகோர்த்தார் என்ற மர்மத்துக்கு விடை என்ன என்றும் கேள்வியெழுப்பினார்.

“சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது, போர் குற்றம் நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை, புலிகள் இன சுத்திகரிப்பு செய்தார்கள், புலிகள் பலவந்தமாக ஆள்க்கடத்தல் செய்தார்கள் என பொய் உரைத்து, ரணில் -மைத்திரி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதிகளை, சர்வதேசத்தில் தப்ப வைத்த சுமந்திரனை, முதலாவது கலந்துரையாடலில், சிவகரன் களம் இறக்கியதன் பின்னணியில் யார் உள்ளார்?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றுபட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பன்னாட்டு இராஜதந்திரிகளை, கூட்டத்தொடருக்கு முன்னதாக கையாழ்வதற்கான ஒரு செயற்றிட்டத்தை உருவாக்கும் நிலைப்பாட்டில் முன்னேற்றம் குறைந்தே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ. நா.வின் சர்வதேச நீதிமன்றில், இலங்கையை நிறுத்த முடியும் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட நாம், தமிழர்கள் வாழ்கிற ஒவ்வொரு நாட்டிலும் இந்த விடயம் தொடர்பாக அந்தந்த அராங்கங்களிடம் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.