பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் நியமனம்!

01.03.2023 10:45:14

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகரான கந்தையா கஜன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் முதலீடுகளை முன்னெடுத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கி வைத்துள்ளார்.

பிரித்தானிய சபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள கந்தையா கஜன், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்.

வணிக அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் நீண்ட அனுபவமுள்ள கஜன், பல்வேறு திட்டங்களின் மூலம் இலங்கை நிலையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

எரிசக்தி, நகர மேம்பாடு, கனிம வளங்கள் ஆகியவற்றிற்காக முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் இலங்கையில் கல்வித்துறை,விவசாயத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்ப்பான அபிவிருத்திகளையும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கையில் விவசாய கால்நடைவளர்ப்பு தொடர்பான பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்ட முகாமையாளராகவும் கந்தையா கஜன் இலங்கையில் செயற்பட்டு வருகின்றார்.

அதோடு கல்வி சார் அபிவிருத்திகளையும் அது தொடர்பான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் பல திட்டங்களையும் கந்தையா கஜன் மேற்கொண்டு வருகிறார்.

பல சர்வதேச நிறுவனங்களின் வணிக முகாமையாளரான கந்தையா கஜன் , பல்வேறு கலாச்சார அமைப்புகளின் ஸ்தாபகராகவும் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் இலங்கை நொதர்ன் கெம்பஸின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.