மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஈஸ்டர் முட்டை போராட்டம் !

05.04.2021 08:09:49

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மியன்மார் நாட்டு மக்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் என்றாலே வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள்தான் மிகப்பிரபலமாகக் காணப்படும்.

இந்த நிலையில் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள், நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஈஸ்டர் முட்டைகள் மீது ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான படங்கள் மற்றும் வசனங்களை வரைந்து போராட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.‌

குறிப்பாக யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களில் ஈஸ்டர் முட்டைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

இதேவேளை, பூக்கள் போராட்டம் என்கிற பெயரில் மற்றொரு போராட்டத்தையும் மியன்மார் மக்கள் முன்னெடுத்தனர்.

இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் நினைவாக வீதிகளில் பூங்கொத்துகளை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.