பெண் அர்ச்சகர்கள் தமிழக கோவில்களில் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் தகவல்

13.06.2021 11:53:43

தமிழகத்தில் தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கட்டிடத்துறை, சட்டதுறை வல்லுநர்கள் அடங்கிய 20 மண்டல-கமிஷனர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கோவில் நிர்வாகம், கோவில் பராமரிப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவது, உணவு வழங்கும் பணி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளை வேகப்படுத்தி துறையை புதுப்பொலிவுடன் மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறநிலையத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவில்களில் பராமரிப்பின்றி பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டு சிதிலமடைந்த தேர்களை சரி செய்வது, புதிதாக தேர்கள் வேண்டும் என்று கோரி உள்ள கோவில்களுக்கு தேர்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. அதேபோல் கோவில்களில் பணி நிரந்தரம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்களை முழு நேர பணியாளர்களாக நிரந்தரப்படுத்தப்பட உள்ளனர். அதேபோல் எந்த கோவில்களில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதோ அங்கு தேவையான அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கோவில்களில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வரும் கோவில்களில் பணிகளை தரமாக அமைப்பதுடன் துரிதப்படுத்துவதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்துடன் புதிதாக 600 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. கோவில்களில் புனிதமாக கருதப்படும் ஸ்தல விருட்ச மரங்களை முறையாக பராமரிப்பதுடன், ஸ்தல விருட்ச மரங்கள் இல்லாத கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட கோவில்கள் தொடர்புடைய ஸ்தல விருட்ச மர கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

ஒரு சில கோவில்களில் இப்போதும் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம்பெறும். அதேபோல் அர்ச்சகர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய தேவையான பயிற்சியும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏற்கனவே. 207 பேர் அர்ச்சகர் பயிற்சி முடித்து உள்ளனர். முதல்-அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க இவர்கள் படிப்படியாக கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை சட்டத்தின் படி நியாயமான வாடகை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலங்களை பாதுகாக்கும் வகையில் நிலத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நிலம் எந்த கோவிலுக்கு சொந்தமானது, இதனுடைய பரப்பளவு எவ்வளவு போன்ற தகவல்கள் அடங்கிய பலகைகளும் அந்த நிலத்தில் வைக்கப்பட உள்ளன.

அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பாதுகாக்க கால்நடை மருத்துவர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான கோவில்களில் முறையாக பராமரிப்பின்றி கிடக்கும் நந்தவனங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

சில கோவில்களுக்கு பெண் அர்ச்சகர்கள் தேவைப்படுகிறார்கள் என்று முதல்-அமைச்சரின் கவனத்துக்கு வந்து உள்ளது. எனவே தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள். மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். திருச்சியில் ஜீயர் நியமனத்தில் எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததோ அதே நடைமுறை தொடரும் என்றார்.