ஜனாசாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை

05.03.2021 07:41:37

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மாநகர் காணியில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒழுங்குகளை மேற் கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதி நிதிகள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதி நிதிகள் ஒட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10   ஜனாசாக்கள் குளிரூட்டிகளிலும் பிரேத அறைகளிலும் உள்ளதாகவும் இந்த ஜனாசாக்களை இன்னும் ஒரு சில தினங்களில் குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.