இங்கிலாந்து பரபரப்பான போட்டியில் இந்தியாவிடம் போராடி தோற்றது !

29.03.2021 10:24:59

 

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 7 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது.

புனே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 48.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 78 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 67 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன், டொப்லே, ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 330 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சேம் கர்ரன் ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.