சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு- முதலமைச்சர் அறிவிப்பு

20.02.2021 11:26:40

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணமான 70ரூபாயானது, 50ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 5-12 கி.மீ. வரையிலான கட்டணமான 40 ரூபாயை 30 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2-5 கி.மீ. வரை கட்டணம் 20 ரூபாய், 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு  கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கி.மீ. 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கி.மீ.க்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.