பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள் - நெதர்லாந்தில்

16.01.2021 08:08:48

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்து நாடும் கடந்த 6-ந்தேதி முதல் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகிறது. இதில் இதுவரை சுமார் 47 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. இதில் 2 பேருக்கு வீக்கம் மற்றும் கண்களை சுற்றி தடித்தல் போன்ற கடுமையான அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு வழக்கமான தலைவலி, சோர்வு, தடுப்பூசி போட்ட இடத்தில் வலி போன்ற சாதாரண பிரச்சனைகளே இருந்ததாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பல நாடுகளில் பைசர் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நார்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில் 23 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

இதைப்போல இஸ்ரேல், பல்கேரியா போன்ற பல நாடுகளிலும் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.