மேற்கிந்திய தீவுகள் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

15.02.2021 11:18:50

பங்களாதேஷிற்கு எதிராக டாக்காவில் இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 395 என்ற ஓட்ட இலக்கை அபாரமாக எட்டி வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்த நிலையில் 2ஆவது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாட களம் நுழைந்த மேற்கிந்திய தீவுகள் அணி 409 ஓட்டங்களைக் குவித்தது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 296 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டையும் இழந்தது. இதனால் 113 ஓட்டங்கள் முன்னிலையில் மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

இருந்தும் பங்களாதேஷின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென்று விக்கெட்டுக்கள் சரிய மேற்கிந்திய தீவுகள் 117 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பங்களாதேஷ் சார்பில் பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 113 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றதால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒட்டுமொத்தமாக 230 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இடைநிலை மற்றும் பின் வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து நெருக்கடியைக் கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 188 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த போதும் மெஹிதி ஹசன் அதிரடியாக விளையாடியதால் போட்டி இறுதி நேரத்தில் பரபரப்பானது.

ஆனாலும் அவர் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணியின் இன்னிங்ஸ் 213 ஓட்டங்களுள் மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று, தொடரையும் 2 – 0 எனக் கைப்பற்றியது.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய கார்ன்வெல், 2ஆவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகனாகி முத்திரை பதித்தார். தொடரின் நாயகனாக (B)பொன்னர் தெரிவு செய்யப்பட்டார்.