அரசியல் கைதி எழுத்தாளர் இன்று விடுதலையாகிறார்!

23.02.2023 07:46:39

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் இன்று (23) விடுதலையாக உள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சமூக ஆர்வலர் செல்லையா சதீஸ்குமார் (விவேகானந்தனூர் சதீஸ்), தமிழ் அரசியல் கைதியாக கடந்த 15 வருடகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சதீஸ்குமார் உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனு அவரால் மீளப்பெறப்பட்டதை அடுத்து அவர் இன்று (23) கொழும்பு, புதிய மகசீன் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாக உள்ளார்.

விவேகானந்தர் நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு ஊர்த்தி ஓட்டுநராக கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணியின் நிமிர்த்தம் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது வவுனியா தேக்கவத்தை சோதனை மையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவருக்கெதிராக விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குறிப்பிட்டு அவசரகால சட்டவிதியின் கீழ் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

அதற்கமைய, வழக்கின் விசாரணை முடிவில் 2011ஆம் ஆண்டு சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

அதனையடுத்து, குறித்த வழக்கின் தீர்மானத்தை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இருந்தபோதிலும், வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் மீளுறுதி செய்தது.

இறுதியாக மனுதாரர் வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றில் மீளவும் மேல் முறையீடு செய்து நிவாரணத்தைக் கோரியிருந்த நிலையிலே பொது மன்னிப்பின் கீழ் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.