பளையில் மூவாயிரம் ஏக்கர் சீனாவிற்கு!

18.02.2021 09:45:42

வடக்கில் எப்படியேனும் சீனா காலுன்றவேண்டுமென்பதில் இலங்கை அரசு விடாப்பிடியாக உள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது பளையில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு இலங்கை அரசு ஒதுக்கி வழங்கியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் ஏற்கனவே குடாநாட்டிலுள்ள தீவகங்கங்களை தாரை வார்க்க முற்பட்ட இலங்கை அரசு அம்முயற்சி பிசுபிசுத்து போயுள்ளதால் அடுத்து பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கென சுமார் மூவாயிரம் ஏக்கர் காணியை சீனாவிற்கு வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

வடக்கில் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கான வீடமைக்க துண்டு காணி கூட இல்லாது திண்டாடிவருகின்றன.

முன்னாள் போராளிகள் ஆயிரக்கணக்கில் தொழிலின்றி திண்டாடிவருகின்றனர்.

அவர்களிற்கு ஒருதுண்டு காணியை வழங்க இந்த அரசு தயராக இல்லை.

அரசு காணிகளை வழங்கப்போவதாக அறிவித்ததையடுத்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வடக்கில் காணிகளிற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசு சீனாவிற்கு மூவாயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குவது உள்நோக்கம் கொண்டதெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கை என்ற பேரில் காணிகளை பகிர்ந்து வழங்குவதென்பது உள்நோக்கம் கொண்டது.பெருமளவில் சிங்கள வர்த்தகர்களிற்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேதுவாக யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் அரச காணிகளை ஒதுக்கி வழங்கும் காணிகள் சீர் திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் அனுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றது.

அந்த அலுவலகத்திற்கு இரு படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சுரேஸ்பிறேமச்சந்திரன் சிவில் நிர்வாக அதிகாரிகளை தூக்கிவிட்டு படையதிகாரிகளை நியமிப்பது உள்நோக்கம் கொண்டதெனவும் தெரிவித்தார்.