உடனடியாக ஊரடங்கை விதியுங்கள் - எதிர்க்கட்சி கோரிக்கை

20.05.2021 10:06:16

கொவிட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய நாடாக மாறக்கூடாது என்பதற்காக நாடளாவியரீதியில் ஊரடங்கை உடனடியாக விதிக்கவேண்டுமே ஒழிய பயணத்தடையை அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் கொவிட் ஆபத்து தீவிரமாகிவிட்டது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள பல்வேறு மருத்துவ சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பித்துள்ளன. அந்த கடிதங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அந்த கடிதம் அரசுக்கு அறிவுறுத்தியது.

இருப்பினும், இது தொடர்பாக ஜனாதிபதி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பி.சி.ஆர் சோதனைகள் எடுப்பதில் காலதாமதமாவதால் மூன்று மடங்கு நோயாளிகள் இருக்கலாம் என்று அந்த மருத்துவ சங்கங்கள் கூறுகின்றன. இது மிகவும் கடுமையான நிலைமை. இன்றும் நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. கொவிட் மட்டுமல்ல, பிற நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 20 பயண கட்டுப்பாடுகளை விதித்தாலும் அது வெற்றிபெறவில்லை.